+2 பொதுத்தேர்வு! முக்கிய விதிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு!!
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் +2 பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில், முக்கிய பொதுத்தேர்வு வழிகாட்டுதல்களையும் விதிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாகக் கடந்த 2020 மார்ச் மாதம் முதலே, நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது.
வைரஸ் பாதிப்பு இந்தாண்டு தான் குறைந்துள்ள நிலையில், நேரடி வகுப்புகளும் தொடங்கப்பட்டது. மாணவர்கள் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பள்ளிக்குச் செல்ல தொடங்கி உள்ளனர்.
பொதுத்தேர்வு
தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடைபெறும் நிலையில், இதற்கான கால அட்டவணையைக் கடந்த மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி +2 மாணவர்களுக்கு நாளை மறுநாள் (மே 5) முதல் மே 28 வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது. அதேபோல +1 மாணவர்களுக்கு மே 9 முதல் மே 31 வரையும் 10ஆம் வகுப்புக்கு மே 6 முதல் 30 வரையும் தேர்வுகள் நடைபெறுகின்றன.
தமிழக அரசு
இதற்கான ஹால் டிக்கெட்டும் சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது. இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தனிமனித இடைவெளியைப் பின்பற்றித் தேர்வு நடைபெறும் என்ற போதிலும், மாஸ்க் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதேபோல தேர்வு எழுதும் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
செல்போனுக்கு தடை
இதனிடையே பொதுத்தேர்வு வழிகாட்டுதல்களையும் விதிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் பொதுத்தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களைத் தேர்வு மையத்திற்கு எடுத்து வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டதால் அவர்கள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அரசு தேர்வுகள் இயக்கக இயக்குநர் தெரிவித்தார்.
ஆள்மாறாட்டம்
அதேபோல பொதுத் தேர்வில் காப்பி அடித்தால், தேர்வை ரத்து செய்து அடுத்த ஓராண்டுக்குத் தேர்வெழுதத் தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பொதுத்தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தால், குறிப்பிட்ட நபருக்குத் தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தவிரத் தேர்வு அறைகளில் நடக்கும் 15 வகையான குற்றங்களைப் பட்டியலிட்டு, அதற்கான தண்டனையையும் பள்ளி தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது,
வினாத்தாள்
மேலும், பொதுத் தேர்வு மையங்களில் உள்ள வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களை ஆயுதம் ஏந்திய காவலர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ அல்லது ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாகத் தேர்வு வினாத்தாள்கள் லீக் ஆவது சர்ச்சையாகி உள்ள நிலையில், இதுபோன்ற அறிவிப்புகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment